பதினைந்து ஆண்டுகள் வரை பலன் தரும் அத்தி சாகுபடி! நல்ல வருமானம் பெறலாம் என்கிறார் மேட்டூர், அனுபவ விவசாயி விராலிக்காடுக வேலு

"சேரநாடு வேழம் உடைத்து சோழநாடு சோறுடைத்து பாண்டியநாடு முத்துடைத்து”


என்பார்கள். சோழநாடு என்பது இன்றைய தஞ்சையும் அதனைச் சார்ந்த பகுதிகளும் ஆகும். தஞ்சை தரணியின் வளத்திற்குக் காரணம் காவிரியின் நீரைத் தேக்கி வைத்துள்ள மேட்டூர் அணையாகும்.


இந்த அணையைத் தொட்டவாறு வேளாண்மை செய்து வரும் க.வேலு அவர்களை நேர்காணல் செய்ய அவரது இல்லத்திற்குச் சென்றபோது ஆடு, மாடுகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தார். 'விவசாயி உலகம்' என்றவுடன் நம்மையும் உடன் வந்த 'விவசாயி உலகத்தின் நீண்ட நாள் வாசகர் செம்மாண்டம் பட்டி சின்னுசாமி அவர்களையும் மனமகிழ்வோடு வரவேற்று உபசரித்தார். அவர் கூறியதாவது....


எங்கள் குடும்பத்திற்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. எனது பெற்றோர் நா.கந்தசாமி மூப்பன், சரஸ்வதி ஆகியோர் விவசாயத்தை கவனித்து வந்தனர். நான் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசையில் என்னை ஐ.டிஐ (தொழிற்கல்வி) படிக்க வைத்தனர்.


2000-ம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தேன். கடுமையான உழைப்பாளியான எனது அப்பாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாலும், அடுத்து மேகலா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனிக்கவேண்டி இருந்ததாலும் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டேன்.


எனது பெற்றோர் செய்ததைக் காட்டிலும் இலாபகரமாக இருக்கும் மாற்றுப் பயிர் செய்யலாம் என எண்ணி கொளத்தூர் வெள்ளக்கரட்டுப்பட்டி ரவி, கருக்கம் பாளையம் செல்லமுத்து, முருங்கை அழகர் சாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை களைப் பெற்றேன். பிறகு தர்பூசணி பயிரிட்டேன். ஓரளவு இலாபம் கிடைத்தது.



எங்கள் பகுதிக்கு வந்த முலாம்பழ வியா பாரி ஒருவர் என்னைப் பற்றி கேள்விப் பட்டு எங்கள் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்து விவசாய சம்பந்தமான செய்திகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதி யைச் சார்ந்த செம்மாண்டம்பட்டி க.சின்ன சாமி அவர்களைப் பற்றி கூறி (98420 31948), அத்தி பற்றிய விவரங்களைப் பெறலாம் எனத் தெரிவித்தார்.


மறுநாள் அவரைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு அவர் கூறிய நாளில் நேரில் சென்று அத்தி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அவர்மூலம் அத்தி பயிர் செய்தேன்.


0-75 செண்ட் நிலத்தில் 650 செடிகள் நடவு செய்தேன். பங்குனியில் இரண்டு உழவு போட்டு நிலத்தை ஆறப்போட்டு பிறகு வைகாசியில் நடவுசெய்தேன். 6க்கு 7 அளவு குழி எடுத்து நுண்ணுயிர் கலந்த தேங்காய் நார்க்கழிவுகளை குழிக்கு 2கிலோ இட்டேன்.


செடி நட்டவுடன் உயிர்நீர் கொடுத்தேன். ஒரு மாதம் வரை வாரத்திற்கு ஒருமுறையும் பிறகு 10 லிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்சினேன். பெரிய நோய்தாக்குதல்கள் இல்லை. இதை ஆடு, மாடுகள் தின்னாது.


என்னிடம் 5 மாடுகள் உள்ளன. அவைகள் மூலம் கிடைக்கும் சாணம், சிறுநீர் கொண்டு பஞ்சகவ்யா, நிலவள ஊக்கி தயார் செய்து பாசன நீருடனும், தெளிப்பாகவும் கொடுத் தேன். குறைந்த அளவு இரசாயனங்களையும் பயன்படுத்தி வருகிறேன்.


ஐப்பசி மாதம் முதல் பறிப்புக்கு வந்தது. தினந்தோறும் பறிக்கலாம். தற்போது நாள் ஒன்றுக்கு 3கிலோ கிடைக்கிறது. கிலோ ரூ.200-க்கு விற்கிறேன். அனைத்து செடிகளும் காய்ப்புக்கு வந்ததால் 6 கிலோ தினந்தோறும் கிடைக்கும். அத்திப்பழமானது மிகுந்த மருத் துவ குணம் கொண்டது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.


கிளைகள், இலைகள் எண்ணிக்கையைப் பொறுத்து விளைச்சல் அதிகரிக்கும். 12 முதல் 15 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முடிந்த வரை கடும்வெயில் காலங்களில் நடவு செய்யக் கூடாது.


ஒரு செடியானது ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு 850 செடிகள் நடலாம். தட்பவெப்பநிலை, பராமரிப்பு முறை ஆகியவற்றால் அதிகபட்சம் 150 செடிகள் காய்ந்து போனாலும், ஆண்டுகள் ஏக்கருக்கு ரூ.5 இலட்சம் வருமானம் பெற வாய்ப்புள்ளது என்றார்.                                                                                            தொடர்புக்கு க.வேலு,


                                                                         மேட்டூர், சேலம் மாவட்டம்


                                                                       செல்: 94439 55593, 98420 31948.


                                                                       சந்திப்பு: கோட்டைச்செல்வம்.