யானைகளுக்கு தனி வயல்!


காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் உணவின்றி தவிக்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாயிகளின் பயிர்களை மேய்ந்து அழித்து வருவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க மலையடிவார கிராமங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. 


யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப் பதும், மின் வேலி, அம்புகள், ஈட்டிகள் மூலம் யானைகளை மனிதர்கள் கொல்வதும் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவமாகும்.


யானைத் தாக்குதல் பற்றி தகவல் வந்தால் வனத்துறையினர் அவ்வப்போது வெடி வைத்தோ, கும்கி யானைகளை கொண்டோ யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டு போய்விடுவார்கள். அப்புறம் பழைய கதை மீண்டும் ஆரம்பிக்கும். இதற்கு நிலையான தீர்வை இது வரை காணப்படவில்லை.


பசியுடன் உணவைத் தேடும் யானை களுக்கு பசியாற்ற உணவு கொடுப்பது மட்டும் தான் இதற்கு தீர்வு. யானைகளுக்கான காடுகளை உருவாக்கி அவற்றில் யானையின் உணவுக் கேற்ற பசுந்தீவனங்கள், பழ வகைளை வளர்ப்பதன் மூலம் இதற்கு ஒரு தீர்வு பிறக்கும்.


இதை அரசாங்கம் யோசிக்கவில்லை. ஆனால் அசாம் விவசாயிகள் யோசித்து செயல்படுத்தியும் விட்டனர். நாட்டிலேயே யானைகளுக்கு உணவளிப்பதற்காகவே தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை கொடுத்து அதில் யானைகள் விரும்பி உண்ணும் கரும்பு, வாழை, யானை ஆப்பிள், நேப்பியர் புல் வகைளை பயிரிட்டுள்ளனர்.


மத்திய அசாமில் உள்ள நாகேன் மாவட் டத்தில் 12 கிராமங்களில் இவ்வாறு மலையடி வாரத்திலிருந்து நெல் வயலுக்கு வரும் வழியில் யானைகளுக்கு தேவையான உணவுப் பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். யானையின் ஆப்பிள் (Elephant Apple) எனப்படும் ஒரு வகை பழமரங்கள் 2000, பலாக் கன்றுகள் 1500, 25 ஆயிரம் வாழைக்கன்றுகள் இப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ளன.


இந்த முயற்சியின் மூலம் யானைகள் தாங்கள் வரும் வழியிலேயே பசியாறி விடுவதால் அவைகள் விவசாயிகள் பயிர் செய்துள்ள உணவு தானிய வயல்களுக்குள் நுழையாது என்ற திட்டத்துடன் இந்த ஜம்போ கேத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


(ஜம்போ என்றால் ஆங்கிலத்தில் யானையை குறிக்கும். இந்தியில் வயலை கேத்தி என்கிறார்கள். எனவே ஜம்போ கேத்தி என்பது யானையின் வயல் என்பதை குறிக்கும்)         


                                                                                                - குயிலிமுனுசாமி.